அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

12/30/14

பொள்ளாச்சி அருள்மிகு ஸ்ரீ இராமலிங்க சௌடாம்பிகை அம்மன் திருக்கோவில் வரலாறு 



           நமது பொள்ளாச்சி சௌண்டம்மன் திருக்கோவில் கொங்கு மண்டல சௌண்டம்மன் திருக்கோவில்களில் மிகவும் பழமையான பிரமாண்டமான திருக்கோவில் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கோவில் 29-03-1940 ல் முதன் முதலில் கற்சிலையுடன்  மூலஸ்தானம் அர்த்த மண்டபம், மஹா மண்டபம் உள்ளிட்டவைகளுடன் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
சுதந்திரத்திற்கு முன்பாகவே இக்கோவில் அமைக்க நம் சமூக வாலிபர்கள் ஒன்றிணைந்து பெரியவர்களிடம் கூறிய பொழுது வேண்டாம் நீங்கள் சிறுவர்கள் எதுவும் முடியாது என்று கூறி நிராகரித்தனர் 1930ல். பின் உயர்திருR.K. காமாட்சி செட்டியார் அவர்கள் முன்னிலையில் அப்போதைய வாலிபர்கள் ஒன்றிணைந்தார்கள். தமிழகத்தில் உள்ள பெரிய சந்தைகளில் பொள்ளாச்சி சந்தை மிகவும் பிரசிதம். அப்போது அங்கு வியாழக்கிழமைகளில் ஜவுளி விற்க பல நம் தேவாங்க குடும்பங்கள் கூடுவர். அப்பொழுது நம் வாலிபர்கள் உண்டியல் வசூல் செய்யலாம் என்று முடிவு செய்து வசூலித்தனர் முதலில் பலர் ஆதரவு தந்தாலும் வாரா வாரம் அங்கு சென்று உண்டியல் ஏந்தியதை கண்டு பலர் துச்சம் செய்தனர். அதையும் பொருட்படுத்தாமல் நமது அம்மனுக்கு கோவில் கட்டியே ஆகவேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக்கொண்டு வசூலித்தனர். சிலசமயம் செவ்வாய்கிழமை நெகமம் சந்திக்கும் சென்று வசூல் பெறப்பட்டது. இந்த காலகட்டங்களில் நெசவாளர் இனம் மிகவும் வறுமைகோட்டிற்கு கீழ் இருந்தது குறிப்பிடதக்கது .
இப்படியாக ஓரளவுக்கு பணம் சேர்ந்ததும் அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்ததில் கோவில் கட்ட பணம் உள்ளது இடம் இல்லை என்ற நிலையில் .. நம் குல முன்னோடிகளில் ஒருவரான பொள்ளாச்சி சுப்பு செட்டியார் அவர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்கு வைத்திருந்த அழகிய கம்பிரமான விநாயகர் கோவிலுடன் கூடிய நந்தவனத்தை தேவாங்க மக்கள் கோவில் கட்டிக்கொள்ள தானமாக வழங்கினார்.



அந்த இடத்தில் அன்னை சௌடேஸ்வரி ஒய்யார கோவிலில் கொலுவிருந்தாள். திரு R.K. காமாட்சி செட்டியார் ,V.K.ராமசாமி செட்டியார் , N.சங்கப்ப செட்டியார் முன்னிலையில்  கோவில் மட்டும் கட்டி 29-3-1940 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.கொங்கு மண்டலத்தில் எழுந்தபழமையான  சௌண்டம்மன்  கோவில் என்பதால் இங்கு வந்து பல ஊர் கோவில்களுக்கு அம்மன் சிலை அச்சு எடுக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு நம் சமூக வாலிபர்களின் உழைப்பால் எப்படியோ கோவில் கட்டி முடிக்கப்பட்டது. நித்திய பூஜைகள் செய்ய வருமானம் வேண்டும் என்று கேள்வி எழும்பியது அப்பொழுது கோவில்க்கு முன்பாக ஓட்டு கொட்டகை இட்டு அதனை நம் சமுதாய மக்கள் பயன்பாட்டிற்கும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு நடத்த வாடகைக்கு விடப்பட்டது. அப்பொழுது பொள்ளாச்சியில் சுற்றியுள்ள மக்களும் இங்கு வந்து கல்யாணம் உள்ளிட்ட மங்கள நிகழ்சிகள் நடைபெற்றது. அவ்வாறு கோவிலுக்கு வருமானமும் பெருகியது. பின் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுத்து தார்ச் கட்டடமாக அமைத்தால் நன்றாக இருக்கும் அதுபோக பொள்ளாச்சியில் கல்யாண மண்டபமும் இல்லை என்பதால் அக்கால உயர் தொழில் நுட்பம் கொண்ட மெட்ராஸ் தார்ச்  கட்டடமாக மிகவும் பிரமாண்டமான கல்யாண மண்டபம் கட்டி கோவிலுடன் இணைக்கப்பட்டது. 26-01-1967 ல் அதே வாலிபர்களால் சமூகத்திற்கு அர்பணிக்கப்பட்டது.


பின் நல்ல வருமானம் வர தொடங்கியது , கொங்கு மண்ணில் வேறு எந்த ஊரிலயும் சௌண்டம்மன் கோவிலில் கல்யாண மண்டப வசதி இல்லை. ஒருமுறை பொள்ளாச்சி மகாலிங்கம் ஒரு கல்யாணத்திற்கு வந்து பார்த்துவிட்டு அசந்துவிட்டார் தேவாங்கர் இவ்வளவு  பெரிய மண்டபம் கட்டியுள்ளார்கள் என்பதை பார்த்து. அதன் பின்னர் தான் பொள்ளாச்சியில் உள்ள காந்தி மண்டபம் கட்டப்பட்டது. இவ்வாறாக திருப்பூர் சித்தப்ப செட்டியார் அவர்கள் வந்து பார்த்துவிட்டு இவ்வளவு தொலைநோக்கு பார்வையுடன் பொள்ளாச்சி தேவாங்கர்கள் செயல்பட்டுளர்கள் நாமும் திருப்பூரில் ஒரு கல்யாண மண்டபம் கட்டவேண்டும் என்று முடிவு செய்து அப்பை செட்டியார் அவர்கள் எல்லாம் சேர்ந்து ஒடக்காடு காலேஜ் ரோடு சௌடாம்பிகா கல்யாண மண்டபம் கட்டினார். இவ்வாறாக பொள்ளாச்சி தேவாங்க வாலிபர்கள் தாங்கள் நிலை நாட்டியதை நினைவு கூறும்படியாக உருவாக்கப்பட்டது தான் "பொள்ளாச்சி தேவாங்க வாலிபர் சங்கம்".  முற்றிலும் வாலிபர்கள் முயற்சியில் உருவானதால் பொள்ளாச்சி தேவாங்க வாலிபர் சங்கம் என்று பெயர் பெற்றது.



இதுவரை கோவிலில் தலைவர்களாக பொறுப்பில் இருந்தவர்கள் :

திரு. R.K காமாட்சி செட்டியார்       - 29-03-1940  முதல் 02-12-1979 வரை
திரு. K.ஆறுமுகசாமி  செட்டியார் - 03-12-1979 முதல் 06-03-2000 வரை
திரு. S. சிவானந்தம் செட்டியார்     -  07-03-2000 முதல் 26- 05- 2006 வரை
திரு. K. தங்கராஜு                                -  27- 05- 2006 முதல் 18-09-2010 வரை
திரு. N.M.சுப்ரமணியம்                       - 19-09-2010 முதல் 06-12-2010 வரை
திரு. M.கிருஷ்ணபாரதி                       - 07-12-2010 முதல்  19-04-2011 வரை
திரு. S.வரதராசன்                                - 20-04-2011 முதல்   11-04- 2013 வரை
திரு. P.தியாகராஜன்                            - 22-09-2013.




கோவில் சிறப்புக்கள் :
மாதம்தோறும் அமாவாசை பௌர்ணமி உள்ளிட்ட தினங்களில் அன்னதானமும், பிரதோஷம், சதுர்த்தி , கிருத்திகை, மார்கழி கட்டளை உள்ளிட்டவை சிறப்பாக கொண்டாடப்படுவதோடு  வருட உற்சவமாக நவராத்திரி உற்சவம் மிகவும் சிறப்பாக 10 - 13 நாட்கள் வெகு விமரிசையாக சௌண்டம்மன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.


பல்வேறு திருப்பணிகள், கல்யாண மண்டபம் புனரமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடைபெற்றுகொண்டுள்ளது,இவ்வாறாக பல கும்பாபிஷேகங்களை கடந்து இப்பொழுது பல்வேறு பரிவார தெய்வங்களுடன் 2015 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் சீரிய முறையில் நடக்கவுள்ளது.

இந்த அறிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட திருவாளர். M.கிருஷ்ணபாரதி மயில்சாமி  அவர்களுக்கு நன்றிகள் பல.

திருக்கோவில் திருப்பணி வேலைகள் ஒரு சிறிய புகைப்பட தொகுப்பு:-














No comments:

Post a Comment